குன்றாத செல்வம் தரும் லட்சுமி குபேர பூஜை!
காசு, பணம், துட்டு, மணி, ரூபாய், டாலர், யூரோ எப்படிச் சொன்னாலும் சரி... எல்லோருக்கும் அவசியம் தேவைப்படுவது இதுதான்.
செல்வம் சேர்ந்துவிட்டால் மட்டும் போதாது. அது தேயாமல் பெருக வேண்டும். தொலையாத நிதியம் அதாவது கரையாமல் சேரும் செல்வம் வேண்டும் என்றுதான் அபிராமிபட்டரே அம்மனிடம் வேண்டுகிறார்.
உங்கள் வீட்டில் செல்வம் சேரவேண்டுமா? திருமகளின் பார்வையும் குபேரனின் அருளும் சேர்ந்து குறைவற்ற பொருட்செல்வத்தை நீங்கள் பெற வேண்டுமா?
இதோ அதற்கான எளிய பூஜை முறை உங்களுக்காகவே தரப்பட்டிருக்கிறது.
ஸ்லோகம் சொல்வது, மந்திரங்களைப் படிப்பது, சுற்றிச் சுற்றி வலம் வருவது, ஏராளமான பூஜைப் பொருட்களை வாங்குவது இப்படி எதுவும் இந்த பூஜைக்கு வேண்டாம். ஆனால் ஒரே ஒரு விஷயம் அவசியம் வேண்டும். அது உண்மையான பக்தியும், நம்பிக்கையுடனான வழிபாடும்தான். இவற்றுக்கு நீங்கள் உத்தரவாதம் தந்தால் போதும். உங்கள் வீட்டில் செல்வமகள் நிரந்த வாசம் செய்வாள் என்பது நிச்சயம்!
பூஜையைத் தொடங்குவதற்கு சில முன்னேற்பாடுகள் அவசியம். முதலாவது, நீங்கள் பூஜை செய்யப்போகும் நாளைத் தேர்ந்தெடுப்பது.
தொடர்ந்து ஒன்பது வாரம் அல்லது ஒன்பது மாதம் குறிப்பிட்ட தினத்தில் செய்யவேண்டிய பூஜை இது. எனவே ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமைகளில் அல்லது மாதம் ஒருநாள் பௌர்ணமி தினத்தில் செய்வது சிறப்பு. உங்களுக்கு உகந்த தினத்தைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
ஆண், பெண் என எவர் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம். அதே சமயம் பூஜையைத் தொடர்ந்து ஒருவரே செய்வது நல்லது. இயலாத சமயத்தில் அதே குடும்பத்தின் வேறு உறுப்பினர் செய்யலாம். குடும்பத்திலுள்ள எல்லோரும் கலந்து கொள்வது மிகச் சிறப்பானது.
இரண்டாவதாகி இந்த பூஜையை செய்திட ஒருமுறைக்கு ஒன்பது காசுகள் என, ஒன்பது தடவைக்குமாகச் சேர்த்து என்பத்தொரு நாணயங்கள் அவசியம். ஒரு ரூபாய் முதல் உங்கள் வசதிக்கு ஏற்ற தொகை வரையான காசைப் பயன்படுத்தலாம். இதில் முக்கியமான விஷயம் எண்பத்தொரு காசுகளும் சம மதிப்பு உடையவையாக இருக்க வேண்டும் என்பதுதான். உதாரணமாக ஒரு ரூபாய் நாணயத்தைப் பயன்படுத்த முடிவு செய்தால் எண்பத்தொரு ஒரு ரூபாய் நாணயங்கள் தேவை. இதேபோல் உங்கள் வசதிக்கு ஏற்ப எண்பத்தொரு காசுகளை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அவ்வளவுதான், நீங்கள் குபேர யந்திர பூஜை செய்யத் தயாராகிவிட்டீர்கள்.
வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி தினம் என நீங்கள் பூஜை செய்யத் தேர்வு செய்த நாளில், அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு உங்கள் வீட்டு பூஜை அறையில் குலதெய்வத்தை மனதார வேண்டி தீபம் ஏற்றுங்கள்.
அடுத்து, செய்யும் பூஜை தடைபடாமல் நடக்கவும், குறைவிலா செல்வம் குறையற்ற வழியில் சேர்ந்திடவும் மகாகணபதியை மனதாரத் துதியுங்கள்.
அந்த நாளில் நல்ல நேரத்தில் உங்கள் வீட்டு பூஜையறையில் ஒரு பலகையின் மீது முன்பக்கம் படத்தில் தரப்பட்டிருப்பது போன்று ஒரு கட்டத்தை வரைந்து, எண்களையும் எழுதுங்கள். இந்தக் கட்டத்தை குங்குமத்தால் வரைவதும், எண்களை அரிமாவால் எழுதுவதும் சிறந்தது. திருமகளைக் குறிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ள "ஸ்ரீ' எனும் எழுத்தை மஞ்சள் பொடியால் எழுதலாம். இதுவே குபேர யந்திரக் கோலம். அடுத்து, கட்டங்களில் எழுதப்பட்டுள்ளது எழுத்துக்களுக்குப் பக்கத்தில் கட்டத்திற்கு ஒன்று வீதம் ஒன்பது நாணயங்களை வையுங்கள். எழுத்தை அழித்தோ, மறைத்தோ வைக்கக்கூடாது. எனவே யந்திரத்தை வரையும் போதே அதற்கு ஏற்றபடி வரைந்து கொள்ளுங்கள்.
நாணயம் மகாலட்சுமிக்கு அடையாளம் இப்போது குபேர யந்திரத்தில் திருமகள் எழுந்தருளியிருப்பதாக ஐதிகம்.
இனி, லட்சுமி குபேர் யந்திரத்தை நீங்கள் பூஜிக்க கொஞ்சம் உதிரி பூக்களை யுடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
யந்திரத்தின் முன் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஒன்றினை ஏற்றிவையுங்கள்.
"தாயே மகாலட்சுமி, மனதார உன்னை வணங்கும் எங்கள் மனையில் மங்களங்கள் யாவும் பெருக வேண்டும். மங்காத செல்வம் சேரவேண்டும். என்றென்றும் உன்னரும் நீங்காது இருக்க வேண்டும்!' என்று மனதார வேண்டுங்கள்.
மகாலட்சுமியே போற்றி! மங்கள லட்சுமியே போற்றி! தீபலட்சுமியே போற்றி! திருமகள் தாயே போற்றி! அன்னலட்சுமியே போற்றி! கிருக லட்சுமியே போற்றி! நாரண லட்சுமியே போற்றி! நாயகி லட்சுமியே போற்றி! ஓம் குபேர லட்சுமியே போற்றி போற்றி!
என்று சொன்னவாறே சிறிய பூவை நீங்கள் வரைந்திருக்கும் குபேர யந்திரத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் போடுங்கள்.
வளம் யாவும் தந்திடுவாய் வைஸ்ரவணா போற்றி!
குலம் செழிக்கச் செய்திடுவாய் குபேரனே போற்றி!
செல்வங்கள் தந்திடுவாய் சிவன் தோழா போற்றி!
உளமாரத் துதிக்கின்றோம் உத்தமனே போற்றி போற்றி!
இந்தத் துதியைச் சொல்லி குபேரனைக் கும்பிடுங்கள்.
தூப, தீபம் காட்டுங்கள். சர்க்கரை கலந்த பால் அல்லது பால் பாயசம் நிவேதனம் செய்யுங்கள்.
அவ்வளவுதான். பூஜை செய்தாயிற்று. அன்று மாலை உங்களால் இயன்ற அளவுக்கு மங்களப் பொருள்களை பிறருக்கு வைத்துக் கொடுங்கள். வசதி குறைவாக இருப்பின் இதனை ஒன்பதாவது வார முடிவில் தந்தாலும் போதும்.
பூஜை செய்த அன்று மாலை ஏதாவதொரு பெருமாள் கோயிலுக்குச் சென்று தாயாரை தரிசியுங்கள். மறுநாள், குபேர யந்திரத்தில் வைத்து பூஜித்த காசுகளை எடுத்து பத்திரப்படுத்தி வையுங்கள். ஒரு துணியை நனைத்து அதனால் குபேர யந்திரக் கோலத்தைத் துடைத்து விடுங்கள்.
அடுத்த வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி நாளில் முன்புபோலவே குபேர யந்திரம் வரைந்து வேறு காசுகளை வைத்து பூஜித்து, மாலையில் கோயிலுக்குச் செல்வதுவரை எல்லாவற்றையும் செய்யுங்கள்.
இப்படி ஒன்பது வெள்ளிக்கிழமைகள் அல்லது ஒன்பது பௌர்ணமிகள் பூஜை செய்து முடித்ததும், அடுத்து வரும் வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி அன்று, சேர்ந்திருக்கும் எண்பத்தொரு காசுகளையும் எடுத்துக் கொண்டு சென்று ஏதாவது ஒரு சிவன் கோயில் உண்டியலிலோ அல்லது பெருமாள் கோயிலில் தாயார் சன்னதியில் உள்ள உண்டியலிலோ செலுத்துங்கள். (சிவபெருமானே குபேரனுக்கு எல்லா செல்வஙகளையும் அளித்தவர். அதோடு அவனை நண்பனாகவும் ஏற்றவர். எனவேதான் சிவாலயத்திலும் செலுத்தலாம்!)
அன்றையதினம் உங்களால் இயன்ற அளவு மங்களப் பொருட்களை பெண்களுக் வைத்துக் கொடுங்கள். அன்றைய தினம் மகாலட்சுமியே ஏதாவது ஒரு உருவில் அதனை பெற வருவாள் என்பது நம்பிக்கை. எனவே, குறைவாகக் கொடுத்தாலும் மனதாரக் கொடுங்கள்.
ஒன்பதாவது வார (மாத) பூஜை முடிந்த நாள் முதல் உங்கள் வீட்டில் நிச்சயம் செல்வவளம் சேரும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் நிறையும். வருடத்துக்கு ஒருமுறை இந்த லட்சுமி குபேர யந்திர பூஜையைச் செய்யுங்கள். குறையாத செல்வதும், நிறைவான நிம்மதியான வாழ்வும் நிச்சயம் கிட்டும்.
போன்:+917598758989