Friday, May 4, 2018

முருகன் வழிபாடு



முருகன் வழிபாடு:
முருக வழிபாடு தொன்மை மிக்கது. சிவனின் மகனான முருகனுக்கும் தமிழர்களுக்கும் இருக்கக்கூடிய தொடர்பு என்பது வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டதாகும். தமிழர்களின் பண்பாட்டோடும் மொழியோடும் தத்துவத்தோடும் பழக்க வழக்கங்களோடும் இம்முருக வழிபாடு பின்னிப் பிணைந்திருந்த தன்மையைச் சங்ககால இலக்கியங்களான திருமுருகாற்றுப்படை, பரிபாடல் என்பன மிகச் சிறப்பாகக் கூறி நிற்கின்றன.
சூரிய வணக்கமும் முருக வழிபாடும்[தொகு]
இயற்கை வழிபாட்டின் ஒரு கூறான சூரிய வணக்கமே பின்னர் முருக வழிபாடானது என்பர். இதனைப் 'பரிபாடற்திறன்' எனும் நூலில் செவ்வேள் வணக்கம் பற்றி எழுதிய "சாரங்கபாணி" பின்வருமாறு விவரித்துள்ளார். "மாக்கடலினின்று நிவர்தெழுந்த இளஞாயிற்றின் இயற்கை அழகில் உள்ளந் தோய்ந்த அன்பர்கள் அதனையே இறையென வழிபட்டு வணங்கினர். அதுவே பின்னர் நீலமயில் மீது வீற்றிருக்கும் செவ்வேள் வழிபாடாக மலர்ந்தது".
இதிலிருந்து மலைவாழ் மக்களுக்குப் பெரும் துன்பத்தை உண்டாக்கியது "இருள்" என்றும் அந்த இருளாகிய துன்பத்தை அகற்ற இளஞாயிறாகிய முருகனை வழிபட்டனர் என்பதும் பெறப்படுகின்றது. இதனையே மறைமலை அடிகளும் குறிப்பிட்டுள்ளார். பழந்தமிழ் நிலம் "நானிலம்" என வழங்கப்பட்டிருந்தது. அதிலே குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வமாக 'முருகன்' போற்றப்பட்டிருக்கின்றான். "சேயோன் மேய மைவரை உலகமும்" என்ற தொல்காப்பியப் பாடலடி இதனை விளக்கி நிற்கின்றது.
முருக வழிபாட்டின் தன்மை
இதனடிப்படையில் முருக வழிபாட்டின் தன்மையை இரண்டு விதங்களில் பார்க்க முடியும்.
1- முருகன் மலைக்கடவுள்
2- முருகன் தமிழ்க்கடவுள்
மக்களின் வாழ்வு முதன்முதற் தொடங்கப்பட்ட இடம் மலை என்பது அறிஞர் கருத்து. ஆதிகால மனிதர் குன்று சார்ந்த குறிஞ்சிப் பகுதிகளில் வாழ்ந்த காலத்தில் முருகன் கடவுளாகப் படைக்கப்பட்டிருக்கலாம் என்பர். இதனையே "விண்பொரு நெடுவரை குறிஞ்சிக்கிழவ" என்று திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் குறிப்பிடுகின்றார். மானுடவியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி முருகன் ஒரு குழுமத்தின் தலைவனாக இருந்து பெரும் வெற்றிகளையீட்டித் தெய்வத்தன்மைக்கு உயர்த்தப்பட்டு நாளடையவில் ஒரு தெய்வமாக வணங்கப்பட்டிருக்கலாம். சமூக அடிப்படையில் மலையைத் தெய்வமாகவும் முருகனை மலைவாழ் இறையாகவும் வழிபட்டிருக்கலாம் என்று கூறமுடிகின்றது.
ஆதிகால மக்கள் தமக்கு விளங்காத சக்திகளைப் பார்த்து அஞ்சினர். தங்களை விட அதிசக்தி வாய்ந்தவர்களைக் கௌரவித்தனர். அக்கௌரவம் அச்சம் பக்தியானது. "சிக்மன் பிறைட்" என்ற அறிஞரின் மானுடவியற் கொள்கைப்படி தெய்வவழிபாடு என்பது தனி மனிதனின் உள்மனப் போராட்டத்தின் எதிரொலியாகும் என்கின்றார். இதனடிப்படையில் தங்களுக்குள் ஒரு தலைவனை உருவாக்கிக் கொண்ட ஆதிகால மக்கள் அவனை "முருகன்" என்றழைத்தனர். ஒரு தலைவனுக்குரிய அழகு, கம்பீரம், வலிமை, கடமையுணர்வு, ஒரு கூட்டத்தை வழிநடத்தும் ஒழுங்குமுறை என்பன அத்தலைவனுக்கு இருந்தன. இதிலிருந்து இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்த் தேசியக் கடவுளின் தொடக்கம் 15,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது தெரிகின்றது.
முருகவழிபாடு குறித்துத் தார்பர் கூறும் போது தமிழர்கள் முருகனைப் போர் நிலத் தெய்வமான கொற்றவையின் மகன் என்று போற்றியதோடு தங்கள் போர்த் தெய்வமாகவும் வணங்கினர் என்று குறிப்பிடுகின்றார்.
மலை வாழ் வேடர்கள் வேட்டையாடும் போது வேலைக் கொண்டு செல்வர். அதேவேளை தம்குலக் கடவுளின் ஆயுதமாகவும் 'வேல்' ஆயுதத்தையே கொண்டனர். அந்த வேலவன் பகைவர்களை அழித்துச் சங்காரம் செய்வான் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது.
மனித வடிவில் முருகனைக் காண தமிழர் மிகவும் விரிவான தத்துவத்தை உள்ளடக்கி இருக்க வேண்டும். இத் தத்துவம் ஒரு சமத்துவ அடிப்படையில் வளர்ந்திருக்கின்றது என்பதனைக் அது காட்டுகின்றது. 'அமரர் இடர் தீர்த்தே அவக்கருளும் வெற்றிக் குமரனடி சிந்திப்பாய் சடர்ந்து' என்கின்றது சைவநெறி. "என்னிருளை நீக்கம் இமையோக் கிடர்க்கடியும் பன்னிரு தோட் பாலன் பாதம்" என்கின்றது சங்கற்ப நிராகரணம். முருகனுக்கும் தமிழர்களுக்கும் இருந்த இறுக்கமான பிணைப்பினை முருகன், 'கந்தன்' என்றும் 'வேலன்' என்றும் 'குகன்' என்றும் அழைக்கப்படுவதில் இருந்து அறிந்து கொள்ளமுடியும்.
தமிழ்க் கடவுள்:
தமிழர் தொன்மையின் வெளிப்பாடு என்பதற்கும் தமிழ் மொழியின் வெளிப்பாடு என்பதற்கும் முருகவழிபாடு முகாமையானதாகும். பன்னிருதோள்களும் பன்னிரு உயிர்கள் பதினெட்டுக் கரங்களும் பதினெட்டு மெய்கள். ஆறு முகங்களும் ஆறு இன எழுத்துக்கள். அவனது வேலே ஆயுத எழுத்து "முருகு" என்ற சொல்லில் 'மு' மெல்லினம் 'ரு' இடையினம் 'கு' வல்லினம் என்று சொல்கின்றனர் தமிழறிஞர்கள்.
முருகன் வள்ளியைக் காதற்திருமணம் செய்வது, அவன் மனிதக் கடவுளாகக் கொள்ளப்பட்டு வழிபடப்பட்ட மக்கள் தலைவன் என்பதனைக் காட்டிநிற்கின்றது. சாதாரண மானுடர்களைச் செய்து கொள்கின்றான் முருகன். ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழர் பண்பாட்டில் இத்தத்துவம் பல விமர்சனங்களை உள்வாங்கி நிற்பதனைக் காணமுடிகின்றது. அதாவது தேவயானை புறத்துறையையும் வள்ளி அகத்துறையையும் குறிப்பதாக வாதிப்போரும் உண்டு. குறப்பெண்ணான வள்ளியுடன் குறிஞ்சித் தலைவனுக்கு உண்டான உறவு இயற்கையானது, என்றும் அதனைப் பிராமணியத்தின் எதிர்ப்பு, சாதியத்தின் எதிர்ப்பு என்று கொள்வாரும் உண்டு. இயற்கையோடு தொடர்புபடுத்துவோர் "கடம்பத்திற்படர்ந்த கொடி" என்று இவர்கள் உறவைக் காண்கின்றனர். ஐம்புல வேடரிடை அகப்பட்ட மனமெனும் வள்ளியை மீட்டு தனதாக்கிக் கொள்ளுகின்ற தத்துவமாகவும் இதனை மெய்ஞானிகள் காண்பர். இலங்கையில் வாழும் ஆதிக்குடிகளான வேடுவர்கள் குறப்பெண்ணான வள்ளியின் காதல் கதையை வைத்துக் கொண்டு, முருகனைத் தங்கள் மைத்துனன் என்று கூறி வழிபடுவதவைக் குறிப்பிடலாம்.
முருக வழிபாட்டின் பல கூறுகள்:
திராவிடரது முருக வழிபாட்டின் பல கூறுகள் அதாவது பூஜைமுறைகள், நம்பிக்கைகள், வள்ளி-முருகன் பற்றிய காதற்கதை, முருகனின் வீரம், அழகை விவரிக்கும் முறை இவையனைத்தும் முருகனை வழிபட்ட சமுதாயத்தின் மனநிலையை உணர்த்துகின்றது. மேலும் சாதியமைப்பற்ற நிலையும் பெண்டிரையும் காதலையும் தமிழர் மதித்துக் கௌரவித்ததையும் காட்டுகின்றது. குறிப்பாக மந்திர தந்திரமற்ற வழிபாட்டு முறை இங்கு முக்கியம் பெற்றது. காடு, வெறியாடுகளம், சோலை, மரத்தடி, அம்பலம் போன்ற இடங்களில் முருகன் உறைவதாகக் கருதப்பட்டு அங்கு அவனுக்கான பூஜைகள் நிகழ்ந்தன. வேலன் வெறியாடல், குன்றக்குரவை, வெறியாட்டு என்பன சிறப்பிடம் பெற்றன. இவ்விழாக்களின் போது ஆட்டைப் பலியிட்டுத் தேன், திணைமா போன்ற வற்றைப் படைத்து ஆடிப்பாடி வழிபட்டனர். இவற்றை மரபு சார் வழிபாட்டு முறைமைகளின் மிச்ச சொச்சங்கள் எனலாம்.
சர்வதேசக் கடவுள் தமிழ்க் கடவுள் முருகன்
ஆகவே இன்றைய காலத்தில் முருகன் என்பவன் மலை நிலத்துக்குரிய தெய்வமாகவும் தமிழ்த் தெய்வமாகவும் வழிபடப்பட்டுள்ளான். அதே பண்புகளுடன் இன்றைய கலியுகத்திலும் சர்வதேசக் கடவுளாகத் தமிழ்க் கடவுளாக முருகன் திகழ்கின்றான்.
ஆறு படை வீடுகள்:
முருகப் பெருமான் வரலாறு பற்றி முதன் முதலாகத் தமிழில் படைக்கப் பெற்ற இலக்கியம்,​​ ‘திருமுருகாற்றுப் படை’ ஆகும்.​ பெரும் புலவர் நக்கீரர்,​​ முருகன் அருள் பெற்றுப் படைத்த சங்க இலக்கியமான திருமுருகாற்றுப் படை,​​ முருகப் பெருமான் கோயில் கொண்டுள்ள ஆறு படை வீடுகளைப் பற்றித் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.முருகன் அருள் பெற்ற புலவர்,​​ மற்றோர் புலவரை முருகனிடம் ஆற்றுப் படுத்துவதே திருமுருகாற்றுப் படை ஆகும்.​ இதனால்,​​ திருமுருகாற்றுப் படைக்குப் ‘புலவர் ஆற்றுப் படை’ என்ற வேறு பெயரும் உண்டு.​’இயற்கை அழகே முருகன்’ என்பது நக்கீரரின் அழுத்தமான எண்ணமாகும்.​ அதனால் முருகப் பெருமானின் அழகைக் ‘கை புனைந்து இயற்றாக் கவின் பெரு வனப்பு’ ​ என்று கொண்டாடுவார்.​ ​பழந்தமிழ் இலக்கண நூலாகத் திகழும் தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியம்,​​ முருகப் பெருமானை ‘சேயோன்’ என்ற பெயரால் அழைக்கிறது.​ ‘சேயோன் மேய மைவரை உலகம்’​ என்பது தொல்காப்பிய சூத்திரத்தில் காணப்பெறும் தொடராகும்.​ ​ ‘சேயோன்’ என்பதற்கு ‘இளையவன்’ என்ற பொருளும் உண்டு.​ இளமை எங்குள்ளதோ அங்கே அழகும் கொஞ்சி விளையாடும்.​ ‘மைவரை உலகம்’ என்றால் ‘மழை மேகம் சூழ்ந்த மலைப் பகுதி’ என்பது பொருள்.​ மலையும் மலை சார்ந்த பகுதியையும் குறிஞ்சித் திணை என்று கூறுகிறது தொல்காப்பியம்.​ ஆம்!​ குன்றிருக்கும் இடம் எல்லாம் குமரன் நின்று அருள் பாலிப்பான்.​’ஆற்றுப் படை’ என்பதே ‘ஆறுபடை’ எனத் திரிந்துவிட்டது என்றொரு கருத்துண்டு.​ முருகப் பெருமான் கோயில் கொண்டுள்ள ஆறுபடை வீடுகளாவன:-
திருப்பரங்குன்றம்:
‘முதல் படை வீடு’ என்ற பெருமையைப் பெறுகின்றது,​​ மதுரை மாநகரை அடுத்துள்ள திருப்பரங்குன்றம்.​ சூரபத்மனை அழித்து,​​ தேவர்களைப் பாதுகாத்தார் முருகப் பெருமான்.​ அவருக்கு தன் மகள் தேவசேனாவை மணம் முடிக்க விரும்பினான் இந்திரன்.​ முருகப் பெருமான் -​ தேவசேனா திருமணம் நிகழ்ந்த திருத்தலமே முதலாம் படை வீடாகிய திருப்பரங்குன்றம்.​திருப்பரங்குன்றத்தில் மலையைக் குடைந்து கர்ப்ப கிரஹம் அமைக்கப் பெற்றுள்ளது.
திருச்செந்தூர்:
சூரபத் ​மனை முரு​கப் பெரு​மான் அழித்த திருத்தலமே​​ இரண்​டாம் படை வீடான திருச்​செந்​தூர்.​ நெல்லை மாவட்​டத்​தில் மிகச் சிறந்த முரு​கன் தல​மாக,​​ கடற்​கரைக் கோயிலாகத் திகழ்கின்றது இவ்வாலயம்.​ ஆண்டுதோறும் இங்கு கந்த சஷ்டி விழா,​​ மிகவும் சிறப்பாக நிகழ்கின்றது.​ திருமலை நாயக்க மன்னரின் காரியக்காரர் வடமையப்பப் பிள்ளை என்பவர்,​​ திருச்செந்தூர் முருகப் பெருமானின் பக்தராக விளங்கியவர்;​ இக்கோயிலுக்குப் பல திருப்பணிகள் செய்தவரென்று வரலாறு சொல்கிறது.​ஊமையாக இருந்த குமர குருபரர்,​​ செந்திலாண்டவர் அருளால் பேசும் சக்தி பெற்று,​​ பாடும் திறனும் பெற்று ‘திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்’,​ ‘மதுரை மீனாட்சியம்மன் பிள்ளைத் தமிழ்’ ஆகிய இலக்கியங்களைப் படைத்தார்.​டச்சு கொள்ளையர்களை நடுநடுங்க வைத்து,​​ அவர்களையும் தன்னை வணங்க வைத்த தனி ஆற்றல் படைத்தவர் திருச்செந்தூர் முருகன் என்றொரு கர்ண பரம்பரைக் கதை உண்டு.
பழம் நீ ​(பழனி):
‘பழம் நீ’ என்பதே ‘பழனி’ எனத் திரிந்தது.​ மூன்றாம் படை வீடான பழனிக்கு,​​ ‘திரு ஆவினன் குடி’ என்பதே பழந்தமிழ்ப் பெயராகும்.​ இங்கு ஆண்டுதோறும் நிகழும் பங்குனி உத்திரப் பெருவிழாவுக்கு,​​ பல்வேறு காவடிகள் சுமந்து பாத யாத்திரையாக பக்தர்கள் வருகின்றனர்.​ ​ இங்கு திருத்தேர் விழா,​​ திருக்கல்யாண விழா,​​ கந்த சஷ்டி விழா,​​ ஆடிக் கிருத்திகை விழா ஆகியவையும் மிகச் சிறப்பாக நடக்கின்றன.​ ​பழனி மலையில் பாதம் தேய நடந்து சென்று வழிபாடு செய்வதே சிறப்பு.​ இருப்பினும் முடியாதவர்களுக்காக விசேஷ வாகன வசதியை ஆலய நிர்வாகம் செய்துள்ளது.​ மலையுச்சியில் நவ பாஷனங்களால் உருவாக்கப்பட்ட ஞானப் பழமாக முருகப் பெருமான் விளங்குகின்றார்.​ இவருடைய எழிலின் நேர்த்தியைக் காணக் கண் கோடி வேண்டும்.​ பழனி முருகப் பெருமானைத் தங்கத் தேரில் வைத்து வழிபாடு செய்யும் எழில்மிகு காட்சியையும் பக்தர்கள் கண்டு களிக்கலாம்.​ வேண்டுதலாகப் பணம் கட்டி முருகப் பெருமான் பவனி வரும் தங்கத் தேரை இழுக்கும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகின்றது.​ இங்கே கிரிவலமும் பௌர்ணமி நாளில் நிகழ்கின்றது.
சுவாமிமலை:
பிரணவ மந்திரத்தின் உட்பொருளை,​​ தந்தை சிவபெருமானுக்கே உபதேசித்த தனயன் முருகப் பெருமான்.​ இந்தத் திருவிளையாடல் நிகழ்ந்த நான்காம் படை வீடே சுவாமிமலை.​ ‘சிவனார் மனம் குளிர உபதேச மந்திரம் இரு செவி மீதிலும் பகர் செய் குருநாதா’ என்று இந்த லீலையை வர்ணித்து மகிழ்ந்துள்ளார் அருணகிரிநாதர்.​ இந்தத் திருத்தலத்தை திருமுருகாற்றுப் படையும்,​​ சிலப்பதிகாரமும் ‘திரு ஏரகம்’ என்று குறிப்பிடுகின்றன.​ தஞ்சை மாவட்டத்தில்,​​ கும்பகோணம் அருகிலுள்ள ‘சுவாமி மலை’ முருகன் தலத்தில் எப்போதும் திருவிழாக் கோலம்தான்.​ இங்கும் ஆடிக் கிருத்திகை விழா,​​ கந்த சஷ்டி விழா,​​ வைகாசி விசாகப் பெருவிழா,​​ பங்குனி உத்திரப் பெருவிழா ஆகியவை மிகவும் சிறப்பாக நடக்கின்றன.
திருத்தணிகை:
‘சிக்​கல்’ என்ற திருத்தலத்தில் வேல் வாங்கி,​​ செந்தூரில் சூரபத்மாதி அவுணர்களை அழித்து,​​ சினம் அடங்கி அமைதி காண முருகப் பெருமான் திருக்கோயில் கொண்ட ஐந்தாம் படை வீடே திருத்தணி.​ போர் உணர்வு தணிந்ததால் இத்தலம் ‘செருத்தணி’ என்று முன்பு அழைக்கப் பெற்றதாகவும்,​​ ‘செருத்தணி’ என்பதே ‘திருத்தணி’ எனத் திரிந்ததாகவும் சிலர் கூறுகின்றனர்.​ஆறுபடை வீடுகளில் படித் திருவிழா,​​ குறிப்பாக ஆடிக் கிருத்திகை விழா மிகவும் சிறப்பாக நிகழும் திருத்தலம் திருத்தணியாகும்.​ திருப்புகழைப் பாடிப் பரவும் பக்தர்களின் பாக்கியமாக ஆடிக் கிருத்திகை அமைந்துள்ளது.​கிருத்திகை விரதம் இருந்து,​​ திருத்தணி முருகனைப் பக்தியுடன் படியேறி வழிபாடு செய்தால் சகல வளமும் நலமும் பெறலாம்.​ ​’வள்ளி’ என்ற குறவர் குலப் பெண்ணை மணம்புரிந்த திருத்தலம் என்ற தனிச் சிறப்பும் திருத்தணிக்கு உண்டு.’தேவசேனா’ என்ற தேவேந்திரன் திருமகளைத் திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொண்ட முருகப் பெருமான்,​​ ‘வள்ளி’ என்ற குறவர் மகளைத் திருத்தணியில் மணம் செய்து கொண்டான்.​ முருகப் பெருமானுக்கு ‘ஏற்றத் தாழ்வு’ என்பது இல்லை என்ற தத்துவத்தை எடுத்துக் காட்டுவதே வள்ளி-தெய்வயானை ​(தேவசேனா)​ திருமணமாகும்.​ ஆம்!​ பக்தர்களிடம் உயர்வு -தாழ்வு காட்டாத பரம்பொருளே முருகன்!​ முருகப் பெருமானின் இரு தார மணத்தின் நோக்கம் இதுதான்.
பழமுதிர் சோலை:
‘பழமுதிர் சோலை மலைக் கிழவோனே’​ என்று தன் திருமுருகாற்றுப் படையை நிறைவு செய்வார் பெரும்புலவர் நக்கீரர்.​ ‘அழகர் மலை’ என அழைக்கப் பெறும் ‘பழமுதிர்சோலை’ சைவ-வைணவ ஒருமைப்பாட்டின் சின்னம்!​ இந்தத் தலத்தில் கள்ளழகராகிய திருமாலும் கோயில் கொண்டுள்ளார்!​ அழகுக்கெல்லாம் அழகான முருகப் பெருமானும் குடி கொண்டிருக்கிறார்.​ ‘முருகு’ என்ற சொல்லுக்கே ‘அழகு’ எனும் பொருள் உண்டே!​ ​
கந்த சஷ்டி சூரசம்ஹார விழா,​​ பங்குனி உத்திர விழா
முருகப் பெரு​மான் திருக்​கோ​யில் கொண்ட ஆறு​படை வீடு​களே அல்​லா​மல் குன்றக்குடி,​​ குமரமலை,​​ குன்றத்தூர்,​​ சிக்கல்,​​ எண்கண்,​​ திருவண்ணாமலை,​​ வயலூர்,​​ விராலிமலை முதலான பல்வேறு தொன்மைத் தலங்கள் தமிழகத்தில் உள்ளன.​ ஐயன் முருகன் அமர்ந்துள்ள ஆலயங்கள் அனைத்திலுமே எப்போதும் விழாக் கோலம்தான்.​ இந்தத் திருத்தலங்களில்,​​ கந்த சஷ்டி சூர சம்ஹார விழா,​​ தைப்பூச விழா,​​ பங்குனி உத்திரப் பெருவிழா,​​ வைகாசி விசாகத் திருவிழா ஆகிய விழாக்கள் மிகவும் சிறப்பாக நடக்கின்றன.குறிப்பாக திருச்செந்தூரில் நடைபெறும் கந்தசஷ்டி சூர சம்ஹார விழா உலகப் புகழ் பெற்ற விழாவாகும்.​ பழனி பங்குனித் தேரோட்டம் மிகவும் புகழ் மிக்கது.
சட்டியிலிருந்தால்…..
‘சட்டியிலிருந்தால் அகப்பையில் வரும்’ என்பது சிலேடை நயத்துடன் கூறப் பெறும் பொன் மொழி ஆகும்.​ ‘மண் சட்டியில் சோறு இருந்தால்தான் அகப்பையில் மொண்டு எடுக்க முடியும்’ என்பது இதன் சாதாரணப் பொருள்.​ ஆனால் இப்பழமொழிக்கு நுட்பமான தத்துவப் பொருளும் உண்டென்பதை திருமுருக கிருபானந்த வாரியார் உள்ளிட்ட பல பெரியோர்கள் விளக்கியுள்ளனர்.​ ‘கந்தசஷ்டி’ விரதம் இருந்தால் அகப்பையாகிய கருப்பையில் பிள்ளைச் செல்வம் உருவாகும் என்பதை இம்முதுமொழி சுட்டிக் காட்டுகிறது.​ சஷ்டி விரதம் இருந்தால் மழலைப் பேறு மட்டுமின்றி,​​ எல்லாச் செல்வங்களையும் பெறலாம் என்பதே மூத்தோரின் கருத்து.​ ​
தித்திக்கும் திருப்புகழ்
முருகப் பெருமானை நினைக்கும்போதே அருணகிரி நாதரின் நினைவும் சேர்ந்தே வரும்.​ தமிழ்க் கடவுளான கந்தவேளை,​​ சந்த வேளாகிய அருணகிரியார்,​​ ‘திருப்புகழ்’ பாடித் துதித்துள்ளது,​​ தமிழர் செய்த தவப் பயனாகும்.​ தன் பாட்டுடைத் தலைவனாகிய முருகப் பெருமானை பாடுகின்ற வேளையில்,​​ அவனது பெற்றோரான சிவபெருமான்,​​ பார்வதி -​ மாமன் மாயவன்,​​ மாமி இலக்குமி,​​ மூத்த சகோதரன் விநாயகன் என சகலரையும் ‘பேத திருஷ்டி’ இல்லாமல் புகழ்ந்துள்ளமை,​​ அருணகிரியாரின் தனிச் சிறப்பு.​ குமரக் கடவுளின் வாகனமாகிய மயில்,​​ அவன் கொடியிலுள்ள சேவல்,​​ அவன் கரத்திலுள்ள சக்தி வேல் என எதையும் விட்டு விடாது துதித்துள்ளார் இந்த அருளாளர்.திருப்புகழ் அமுதத்தில்,​​ தேவ குஞ்சரியையும் வள்ளிப் பிராட்டியையும் வழுத்தியுள்ளார்.​ ‘திருமால்’ என்று எடுத்துக் கொண்டாலும் அவரது அவதாரங்களையும் பரவலாகப் பாடியுள்ளார்.​ இவை போதாது திருஞான சம்பந்தர்,​​ சுந்தரர்,​​ திலகவதியார் போன்ற சிவனடியார்களையும் போற்றியுள்ளார்.ஆதி சங்கரருக்குப் பிறகு சமய சமரசத்தோடு பாடிய அருட்கவிகள் சிலரில் அருணகிரி நாதருக்கு முக்கிய இடம் உண்டு.​ ‘வனச மாமியாராட,​​ நெடிய மாமனாராட,​​ மயிலுமாடி நீயாடி வர வேண்டும்’​ என்று பாடிய அருணகிரி நாதரிடம்,​​ ஆடி கிருத்திகை நாளன்று,​​ ‘நீ ஆடி வர வேண்டும்!​ நீ பெற்ற பேறு நாங்களும் பெற வேண்டும்’ என வேண்டுவோம்.​ அவருடைய பக்தியில் நூறு கோடியில் ஒரு பங்காவது நாம் பெற்றுவிட்டால்,​​ கந்தனருள் நமக்கு நிரந்தரம் என்பதில் ‘வேல் முனை’ அளவும் ஐயமில்லை.
ஸ்ரீ முருகன் மூல மந்திரம்:
கந்த குரு கவசத்தின் நோக்கமே கந்தனின் மூல மந்திரத்தை சொல்வதுதான்.
தினமும் கந்த குரு கவசம் கேளுங்கள். கந்த குரு கவசத்தின் நோக்கமே கந்தனின் மூல மந்திரத்தை சொல்வதுதான்.
முருகன் மூல மந்திரம்:
ஓம் சௌம் சரவணபவ
ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ.
- என்று ஓதி முருகனருள் பெருக.
மேலும் இம்மந்திரத்தின் பெருமையை அறிய பொறுமையாக கந்த குரு கவசத்தை கேளுங்கள்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989