பொதுவாக தமிழகத்தில் எந்த ஒரு குலதெய்வம் இருந்தாலும் அங்கு பேச்சியம்மன் என்ற பெரியாச்சி அம்மன் இல்லாமல் குலதெய்வம் இருக்காது. ஒவ்வொரு குலதெய்வத்திலும் பல பேர்களோடு அவர்களின் வம்சபேரோடு இந்த பேச்சியம்மன் இருக்கும். இந்த அம்மன் வீட்டில் இருக்கும் கர்ப்பவதிகளுக்கு மிகமுக்கியமான ஒரு தெய்வமாகவே இருக்கின்றது. அவர்களை பாதுகாக்கும் வேலையை பேச்சியம்மன் தான் செய்யும். பேச்சியம்மனை வயதான மூதாட்டிபோல் சில இடங்களில் வைத்திருப்பார்கள். பேச்சி ஆத்தா என்று அழைப்பார்கள். அந்த காலத்தில் மகப்பேறு என்பது எல்லாம் வயதான பெண்மணிகள் தானே பார்த்தார்கள் அதனால் கூட இதனை அப்படி வைத்திருக்கலாம். நீங்கள் கிராமகோவில்களுக்கு சென்று பார்த்தால் கண்டிப்பாக அங்கு பேச்சியம்மன் வழிபாடு இல்லாமல் இருக்காது. பொதுவாக இதற்கு அசைவம் வைத்து தான் படைப்பார்கள். அதிலும் களி, கருவாட்டுக்குழம்பு. முருங்கை கீரை போன்றவற்றை வைத்து படைப்பார்கள். பேச்சியம்மன் வழிபாடு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகின்றது என்றே நினைக்கின்றேன். மனிதன் நாகரீகத்தை நோக்கி வந்துவிட்டான். அப்பொழுது குழந்தை இல்லை என்றால் பேச்சியம்மனை வணங்கி வருவார்கள் குழந்தை பிறக்கும். இந்த காலத்தில் அனைவரும் வேறு வழிப்பாட்டை தொடங்கிவிட்டனர். குழந்தை பிறக்கமாட்டேன்க்கிறது. இந்த காலத்தில் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் குழந்தைகளை ஊசி மருந்தில் தான் பிறக்கின்றது. ஒன்றும் இயற்கையாகவே உருவாகவே இல்லை. திருமணம் முடிந்த கையோடு மருத்துமனையில் தான் குடியாகவே இருக்கின்றனர். எப்படி இயற்கையாக பிறக்கும். இந்தியாவில் இன்னும் கொஞ்சம் காலத்தில் விளையாட்டுதுறையே இல்லாமல் போய்விடும். யாருக்கு தெம்பு இருக்கின்றது விளையாடுவதற்க்கு அவன் அவன் இடரி கீழே விழுவது போல் இருக்கின்றான். இவன் எங்கு போய் விளையாடுவது. ஒரு வழக்கத்தையும் எளிதில் மாற்றக்கூடாது.குலதெய்வத்தை மறந்துவிட்ட ஆட்களைபோய் குலதெய்வம் கோவிலில் இருக்கும் பேச்சியம்மனை வணங்கசொன்னால் எப்படி தெரியும்.குலதெய்வம் இருக்கும் ஆட்கள் பேச்சியம்மனையும் சேர்த்து வணங்கிவாருங்கள். உங்கள் குலம் தழைக்கும். முதலில் குழந்தை பிறந்தவுடன் குலதெய்வ கோவிலில் முடிக்காணிக்கை எல்லாம் செய்வது பேச்சியம்மனுக்காக மட்டுமே தான். ஊரு ஊராக குழந்தை வேண்டி அலைவதை விட குலதெய்வத்தில் இருக்கும் பேச்சியம்மனை வேண்டினால் நல்லது. நான் சொல்லும் குலதெய்வம் வழிபாடு மற்றும் குலதெய்வத்தை வீட்டில் வைத்து பச்சை பரப்புதல் வழிபாடு எல்லாம் பல கோடி விசயங்கள் அதன் உள்ளே இருக்கின்றது.
பேச்சி தமிழக கிராமங்களில் வழிபடும் ஒரு பெண் காவல் தெய்வம். தென்மாவட்ட மக்கள் அதிகம் வழிபட்டாலும், தமிழ்நாடு முழுக்க பேச்சிக்கு கோவில்கள் இருக்கின்றன.
பேச்சியின் மறுபெயர்கள்:
பேச்சி
பேச்சியம்மன்
பேச்சியாயி
வழிபாடு:
பொங்கல் வைத்து பூசை செய்யப்படுகிறது. பல இடங்களில் சைவ வழிபாடு என்றாலும், சில இடங்கள் ஆடு வெட்டியும் பூசை நடத்துகின்றார்கள்.
பிறப்பின் போதே பேச்சாற்றல் வராமல் பாதிக்கப்பட்டவர்களும், திக்கி திக்கி பேசுபவர்களும் பேச்சியை வழிபாடு செய்தால் குறை தீரும் என்பது நம்பிக்கை.
பே(ய்)ச்சியம்மன்:
'பேச்சியம்மன்' என்பது 'பே(ய்)ச்சியம்மன்' என்பதின் திரிந்த வடிவமாக கருதப்படுகிறது. சங்க இலக்கியங்களில் பேய் மகளிர் குறித்த பதிவுகள் இருக்கின்றன.
"பிணக்கோட்ட களிற்றுக் குழம்பி னிணம்வாய்ப் பெய்த பேய்மகளி ரினையொலி யிமிழ் துணைங்கைச் சீர்ப் பிணை யூப மெழுந்தாட வஞ்சு வந்த போர்க்களம்" (மதுரைக்காஞ்சி 24 -28)
"போரிலே வீழ்ந்த நல்ல தந்தங்களையுடைய யானைப் பிணங்களின் குருதியைக் குடித்து, சிதறிக் கிடந்த குறைதலைப் பிணம் எழுந்து தன்னோடு ஆடும்படி பேய்மகள் துணங்கைக் கூத்தாடுவாள்" என்று பாடுகிறார் மாங்குடி மருதனார். புறநானூற்றிலும் இவை மிகுதியாகக் காணப்படுகிறது.
"பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கு மடியேன்" என காரைக்கால் அம்மையார் குறித்து திருத்தொண்டர் தொகை போற்றுகிறது.
"பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்" என பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் திரௌபதை கூறுவதையும் நோக்கலாம். எனவே பேய் மகளிர்க்கும், பிணத்திற்குமான தொடர்பு சங்க காலம் தொட்டு நீடித்து வந்துள்ளது எனவும் கருதுகிறார்கள்.
பேச்சியம்மன் வரலாறு
வல்லாளன் என்ற அரசன் மிகவும் கொடுங்கோலனாக இருந்தான். அவனுடைய எல்லா கொடுமைகளுக்கும் அவனுடைய மனைவியும் உறுதுணையாக இருந்தாள். இதனால் அந்நாட்டு மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகினர். அவனது மனைவியின் பிரசவ நேரத்தில், அவனுக்குப் பிறக்க இருக்கும் குழந்தையின் உடல் இந்தப் பூமியைத் தொட்டவுடன் அவன் அழிந்து விடுவான் என்றும், மாறாக அது பூமியைத் தொடாமல் ஒரு நாள் இருந்து விட்டால், அதற்குப் பிறகு அவனுக்கு அழிவே இருக்காது என்றும் அவன் ஒரு சாபம் பெற்றிருந்தான். இந்தச் சாபத்தை அறிந்த அந்நாட்டு மக்கள், அவனுக்குப் பிறக்கும் குழந்தை தன் கொடூரத்தால் நாட்டையே அழித்து விடும் என்று பயந்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் அவனது மனைவி கருவுற்றாள். பிறக்கும் குழந்தை பூமியை உடனே தொட்டுவிட்டால் தனக்கு மரணம் ஏற்படும் என்றாலும், அந்தச் சாபம் தோல்வி அடைந்து விட்டால் அதற்குப் பிறகு தனக்கு அழிவே கிடையாது என்பதால், மனைவியின் பிரசவத்தின் போது, குழந்தையின் உடல் பூமியைத் தொடாதபடி பிரசவம் பார்ப்பதற்கு ஏற்ற பெண்மணியைத் தேடி வந்தான்.
அவனது மனைவிக்குப் பிரசவ நேரம் நெருங்கியது. அரசனான அவன் தனது மனைவிக்குப் பிரசவம் பார்க்கத் தகுந்த மருத்துவச்சியை அழைத்து வரச் சென்றான். அப்போது அவன் எதிரில் வயதான ஒரு பெண்மணி வந்து கொண்டிருந்தாள். அவன் அவளிடம் யாரென்று விசாரித்தான். அவள் தனது பெயர் பெரியாச்சி என்றும், தான் ஒரு மருத்துவச்சி என்றும் சொன்னாள்.
அரசன் மகிழ்ச்சியடைந்தான். அவளிடம், ‘நான் இந்நாட்டின் அரசன். எனது மனைவிக்குப் பிரசவம் பார்க்க வேண்டும். பிறக்கும் குழந்தை பூமியைத் தொடாமல் ஒரு நாள் முழுவதும் பார்த்துக் கொண்டால், நிறைய பொன்னும் பொருளும் தருவதாகச் சொன்னான். வயதான அந்தப் பெண் மணியும் அதற்குச் சம்மதித்து அவனுடன் அரண்மனைக்குச் சென்றாள்.
அந்தப் பெண்மணி அரசிக்கு நல்லமுறையில் பிரசவம் பார்த்து, குழந்தையைப் பூமியில் பிறக்கும்படியாக விடாமல், தன் கைகளில் ஏந்திக் கொண்டாள். அரசனின் விருப்பப் படியே பிரசவம் பார்த்த அவள், தனக்குத் தருவதாகச் சொன்ன பொன்னையும் பொருளையும் உடனடியாகத் தரும்படி அவனிடம் கேட்டாள். அவன் அதைத் தராமல், அவளைத் தன்னுடைய அடிமை என்றும், இனி அரண்மனையை விட்டு வெளியேற முடியாது என்றும் சொல்லி மூதாட்டியை இகழ்ந்து பேசினான்.
இதைக் கேட்டு கோபம் கொண்ட அந்தப் பெண்மணி, பயங்கர தோற்றம் கொண்டவளாக உருமாறினாள். அரசனைக் கீழே தள்ளி அவனைத் தன் கால்களால் மிதித்துக் கொண்டு, அவன் மனைவியைத் தூக்கித் தன் மடியில் போட்டுக்கொண்டு அவள் வயிற்றைத் தன் கரங்களால் பிளந்தாள். அந்த அரசனையும் காலால் மிதித்துக் கொன்றாள். கொடுங்கோல் ஆட்சி புரிந்த அரசனும், அவன் மனைவியும் அழிக்கப்பட்டார்கள் என்று அறிந்த அந்நாட்டு மக்கள், அனைவரும் அங்கு ஒன்று கூடினர்.
அரசனையும், அவன் மனைவியையும் அழித்து, தங்களைக் காப்பாற்றியது ‘பெரியாச்சி’ என்ற பெயரில் வந்திருந்த காளியம்மன் என்பதையும் தெரிந்து கொண்டனர், அன்னையை வணங்கினர். தங்களைக் காப்பாற்றிய அம்மனுக்கு ‘பெரியாச்சியம்மன்’ என்ற பெயரிலேயே கோவில் அமைத்து வழிபட்டு வந்தனர். இந்தப் பெரியாச்சியம்மன் என்பதே நாளடைவில் ‘பேச்சியம்மன்’ என்றாகிப் பல இடங்களில் கோவில் கொண்டு விட்டார் என்பதாக கூறப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க, கல்விக் கடவுளான சரஸ்வதியின் மறு தோற்றம்தான் பேச்சியம்மன். பேச்சு அம்மன் என்றிருந்ததே பின்னர் பேச்சியம்மன் என்று மருவிவிட்டது என்று சொல்பவர்களும் உண்டு.
பேச்சியம்மன் குறித்த வரலாற்றுத் தகவல்கள் ஒவ்வொன்றும் வேறாக இருந்தாலும், பேச்சியம்மனுக்குத் தமிழ்நாடு மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மலேசிய நாடுகளிலும் அதிகமான கோவில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இது தவிர மற்றொரு கதையும் சொல்லப்படுகிறது. அதையும் பார்க்கலாம்.
ஒரு குடும்பத்தில் சகோதரர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அவர்களிடமிருந்து இளைய சகோதரன் ஒருவன் மட்டும் பிரிந்து சென்றான். பிரிந்து சென்ற அவன் நீண்ட நாட்களுக்குப் பிறகு, தொலைவிலிருந்த ஒரு ஊரைச் சென்றடைந்தான். அவனுக்கு அந்த ஊரிலிருந்த பேச்சி எனும் பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பின் தொடர்ச்சியாக அவன், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான். இந்தத் திருமணத்திற்கு அந்த ஊரிலிருந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த தம்பதியரால் ஊரில் இருக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவர்கள் இருவரும் அங்கிருந்து வெளியேறி அருகில் இருந்த காட்டுப்பகுதியில் குடிசை போட்டு வசித்து வந்தனர்.
இந்நிலையில், தங்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்ற சகோதரனைத் தேடி, அவனுடைய மற்ற சகோதரர்கள் அந்த ஊருக்கு வந்தடைந்தனர். தம்பியைப் பற்றி விசாரித்தபோது, அவன் அங்குள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், ஊரார் எதிர்ப்பு தெரிவித்ததால், காட்டுப் பகுதியில் வசித்து வருவதாகவும் தகவல் கிடைத்தது. இதனால் மிகவும் கவலையடைந்த அவர்கள் காட்டுக்குள் வசிக்கும் தங்கம் சகோதரனைத் தேடிச் சென்றனர். அங்கு ஆடு மேய்க்கும் சிலர், அவர்களுடைய சகோதரனும், அவன் மனைவியும் காட்டுக்குள் இருக்கும் இடத்தைத் தெரிவித்தனர்.
அந்த இடத்திற்குச் சென்ற அவனது சகோதரர்கள், தங்கள் சகோதரனையும், கர்ப்பிணியான அவன் மனைவியையும் பார்த்தனர். பின்னர் சகோதரனை மட்டும், தங்களுடன் வந்துவிடும்படி அழைத்தனர். அவன் தன்னுடைய கர்ப்பிணி மனைவியை விட்டு வர முடியாது என்று மறுக்க, கோபம் கொண்ட அவனுடைய மூத்த சகோதரர்கள் அனைவரும் சேர்ந்து அவனது மனைவியை கர்ப்பிணி என்றும் பார்க்காமல் கொன்றுவிட்டனர். அவர்களைத் தடுக்கச் சென்ற சகோதரனும் கொல்லப்பட்டான்.
இதைக் கண்ட ஊர்க்காரர்கள், ‘கருவுற்ற பெண்ணைக் கொன்றதால் தங்கள் ஊருக்கு ஏதாவது தீயசெயல்கள் நடந்து விடக்கூடாதே?’ என்று அச்சமடைந்தனர். இதையடுத்து ஊர் பெரியவர்கள் அனைவரும் பேசி, அந்தப் பெண்ணுக்கு ஒரு கோவில் எழுப்பி வணங்கி வர முடிவெடுத்தனர். அந்த வழிபாடே பேச்சியம்மன் வழிபாடு என்று கூறப்படுகிறது. செவி வழிக் கதையாக இது உள்ளது. அதே நேரத்தில் காளியம்மனின் மற்றொரு தோற்றம்தான் பேச்சியம்மன் என்பதும் சிலரது கருத்தாக உள்ளது.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989