சனி தோஷம் விலகும், கடன் தொல்லை தீரும்.. பஞ்சதீப எண்ணெய் தரும் பரவசப் பலன்கள்!
அகல், திரி, எண்ணெய், சுடர் இந்த நான்கும் சேர்ந்ததுதான் விளக்கு. இந்த நான்கும், அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் இணைந்ததுதான் வாழ்க்கை என்று குறிக்கின்றது. வீட்டில் தீபம் ஏற்றினால், மகாலட்சுமி அருள் கிடைக்கும், தீய சக்திகள் விலகும் என்பது நம்பிக்கை. நமது உடல் மற்றும் ஆன்மா இரண்டும் பஞ்சபூத சக்தியால்தான் ஆட்கொள்ளப்படுகின்றன. நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று இவையனைத்தையும் சமநிலையில் வைத்திருந்தாலே, தொல்லைகள் நீங்கி ஆனந்தம் அடையலாம். பஞ்சபூத சக்தியை சமநிலைப்படுத்த பஞ்சதீப எண்ணெயைப் பயன்படுத்துவதே போதுமானதாகும்.
பஞ்சதீப எண்ணெய் என்றால் என்ன?
வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், பசுநெய், இலுப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்த ஐந்தும் கலந்ததுதான் பஞ்சதீப எண்ணெய். பஞ்சமி திதியன்று, பஞ்சதீப எண்ணெய் ஊற்றி, ஐந்து முக விளக்கேற்றி வழிபட்டால், இறையருள் பரிப்பூரணமாகக் கிடைக்கும். நான்கு முக தீபம் ஏற்றி வழிபட்டால், பசு பூமி போன்ற செல்வங்களைத் தரும். மூன்று முக தீபம் ஏற்றி வழிபட்டால், புத்திர சுகம் கிடைக்கும். இரண்டு முக தீபம் ஏற்ற குடும்ப ஒற்றுமை பெருகும் என்றும், ஒரு முக தீபம் ஏற்றுவதால், மத்திமமான பலன்கள் கிடைக்கும் என்பார்கள். இப்படி அவரவரின் தேவைகளுக்கேற்ப விளக்கை ஏற்றலாம்.
அமாவாசை, பெளர்ணமி அன்றும் செவ்வாய், வெள்ளி போன்ற தினங்களிலும் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை இந்த எண்ணெயில் விளக்கேற்றுவது சிறந்த பலனைத் தரும்.
கடைகளில் கிடைக்கும் பஞ்சதீப எண்ணெய் சுத்தமானதா? என்று பலருக்கும் சந்தேகம் வரலாம். அத்தகையவர்கள், இந்த ஐந்து எண்ணெய்களின் சமமான அளவை எடுத்துக்கொண்டு உதாரணமாக எல்லா எண்ணெய்களிலும் 100 மில்லி என்ற அளவில் எடுத்துக்கொண்டு நன்றாகக் கலக்கி, தூய்மையான ஒரு பாட்டிலில் வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.
பஞ்சதீப எண்ணெயின் பலன்கள் :
சாதாரண தீப எண்ணெயை ஏற்றுவதைக் காட்டிலும் பஞ்சதீப எண்ணெயை ஏற்றுவதால், மிகுந்த பலனை அடையலாம்.
தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றி வழிபட்டால், வசீகரம் கூடும்.
நல்லெண்ணெயில் தீபம் ஏற்றி வழிபட, ஆரோக்கியம் பெருகும் எமபயம் அணுகாது.
சகல காரியங்களும், வெற்றிபெற இலுப்பை எண்ணெயில் விளக்கை ஏற்றலாம்.
அழியாத புகழைப் பெற விளக்கெண்ணெய் தீபம் ஏற்றலாம். செல்வ விருத்தி, நினைத்தது நிறைவேற பசு நெய் சிறந்ததாகும்.
கணவன் மனைவி உறவு மேம்பட, சிறந்தது வேப்ப எண்ணெய்.
இப்படி அனைத்து வகையான எண்ணெய்களில் தனித்தனியே கிடைக்கும் பலன்களை பஞ்சதீப எண்ணெய் விளக்கு ஒன்றை ஏற்றுவதன் மூலம் பெறலாம்.
தேங்காய் எண்ணெய் தீபம் ஒரு ஜோடி ஏற்றி வைப்பதன் பலன், ஒரு நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி வைப்பதற்குச் சமம். நல்லெண்ணெய் தீபம் ஒரு ஜோடி ஏற்றி வைப்பதன் பலன், பசு நெய்யில் ஒரு விளக்கினை ஏற்றி வைப்பதற்குச் சமம். ஆயிரம் பசு நெய் விளக்குகளை ஏற்றி வைப்பதன் பலன் ஒரு இலுப்ப எண்ணெய் விளக்கை ஏற்றி வைப்பதற்குச் சமம். பஞ்சதீப எண்ணெயை ஆலயங்களிலும் வீட்டிலும் ஏற்றிவைப்பதால், எண்ணற்ற பலன்களை நாம் அடையலாம்.
விளக்கு ஏற்றும் திசைகள் :
பொதுவாக நாம் விளக்கை கிழக்கு திசை நோக்கியே ஏற்றுகின்றோம் இதனால், நம் வாழ்வில் துன்பங்கள் தொலைந்து, இன்பங்கள் பெருகும் என்பது நம்பிக்கை. அதுபோல, தெற்கு திசை நோக்கி தீபத்தை ஏற்றிவைப்பது எமனை அழைக்கும் செய்கையாகும்.
கடன் தொல்லை நீங்கி சனிதோஷம் விலக மேற்கு திசை நோக்கி, விளக்கை ஏற்றவேண்டும். செல்வ வளம் பெருக, திருமணத் தடை நீங்க, கல்வி ஞானம் பெருக வடக்கு திசை சிறப்பாகும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989