Monday, December 25, 2017

முருகனின் ஆறுபடை வீடுகள்


முருகனின் ஆறுபடை வீடுகள்
தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு கோயில்கள் ஒவ்வொன்றும் அவருடைய படைவீடு எனப்படுகின்றது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன. இந்த ஆறு இடங்கள்,
திருப்பரங்குன்றம்
திருச்செந்தூர் அல்லது திருச்சீரலைவாய்
திருவாவினன்குடி (எ) பழனி
திருவேரகம் (எ) சுவாமிமலை
திருத்தணி அல்லது குன்றுதோறாடல்
பழமுதிர்சோலை
முதற்படை வீடு திருப்பரங்குன்றம்:
முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். மதுரைக்கு தென்மேற்கில் சுமார் எட்டு கி.மீ தொலைவில் உள்ள இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.
இரண்டாம்படை வீடு திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. சூரபத்மனைப் போரில் வென்ற செந்தில் நின்று சிரிக்கும் கோயில் இதுதான். ஐப்பசி மாதம் இங்கு நடக்கும் சூரசம்காரம் திருவிழா பிரபலமானது. இது மட்டுமின்றி ஆவணித்திருவிழா மற்றும் மாசித்திருவிழா ஆகியவை இங்கு புகழ்பெற்றவை ஆகும். நாழிக்கிணறு என்ற தீர்த்தம் இங்கு உள்ளது. கடலுக்கு மிக அருகில் உள்ள இந்த நீரூற்றில் தண்ணீர் சுவையாக இருக்கின்றது
மூன்றாம்படை வீடு திருவாவினன்குடி, பழனி :
திருவாவினன்குடி முருகனின் மூன்றாம் படை வீடாகும். பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்த அறுபடை வீடுகளில் ஒன்றான இக் கோயில் குழந்தை வேலாயுத சுவாமி கோயில் என அழைக்கப்படுகிறது. நாரதர் சிவனுக்கு அளித்த ஞானப்பழம் தனக்கு கிடைக்காததால், முருகர் கோபம் கொண்டு ஆண்டியின் கோலம் பூண்டு இந்த திருத்தலத்தில் தங்கிவிட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது. சங்ககாலப் புலவரான நக்கீரரும், பிற்காலத்தவரான அருணகிரிநாதரும் திருவாவினன்குடி முருகனைக் குறித்துப் பாடல்கள் பாடியுள்ளனர். அகத்தியர் இங்கு தவம் புரிந்து முருகனிடம் தமிழிலக்கணம் பயின்றதாகப் புராணங்கள் கூறுகின்றன
நான்காம்படை வீடு சுவாமிமலை :
சுவாமிமலை முருகனின் நான்காவது படைவீடு ஆகும். இங்கு முருகன் சுவாமிநாத சுவாமி என்ற பெயரில் கோவில் கொண்டுள்ளார். இத்தலத்தில் உறையும் கதிர்வேலன், தனது தந்தை சிவபெருமானுக்கு குருவாக இருந்து பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததாக புராணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இங்கு வீற்றிருக்கும் முருகப் பெருமானை சுவாமிநாதன், தகப்பன் சுவாமி என்றெல்லாம் அழைக்கிறோம். இதன் காரணமாகவே இந்தத் திருத்தலமும் சுவாமிமலை என்று அழைக்கப்படலாயிற்று. இது கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது.
ஐந்தாம்படை வீடு திருத்தணி :
திருத்தணி முருகனின் ஐந்தாம் படைவீடு ஆகும். முருகன் வேடர்குலத்தில் பிறந்த வள்ளியைக் காதல் மணம் புரிந்துகொண்ட இடமே திருத்தணி. வள்ளியின் தந்தை நம்பிராஜன் முருகனுக்கு வள்ளியைத் திருமணம் செய்து கொடுக்க மறுத்து, முருகனுடன் போரிட்டு மடிகிறான். பின் முருகன் வள்ளியைத் திருமணம் செய்து கொள்கிறான். முருகன் போரிட்ட கோபம் தணிய நின்ற மலையே தணிகை மலை ஆகும். அதுவே திருத்தணி என்று போற்றப்படுகிறது. சீபுரணகிரி, கணிகாசலம், மூவாத்திரி , அண்ணகாத்திரி, செருத்தணி போன்ற பெயர்களும் உண்டு.
ஆறாவதுபடை வீடு பழமுதிர்சோலை:
பழமுதிர்சோலை முருகனின் ஆறாவது படைவீடு ஆகும். இதற்கு திருமலிருஞ்சோலை குலமலை கொற்றை மலை என்ற பெயர்களும் உண்டு. ஒளவைபாட்டிக்கு நாவல்பழத்தை உதிர்த்து கொடுத்ததால் பழமுதிர்ச்சோலை என்று பெயர் பெற்றது.
முருகனுக்கு எத்தனை பெயர்கள்?
1. அமரேசன், 2. அன்பழகன், 3. அழகப்பன், 4. பாலமுருகன், 5. பாலசுப்ரமணியம், 6. சந்திரகாந்தன், 7. சந்திரமுகன், 8. தனபாலன், 9. தீனரீசன் 10. தீஷிதன், 11. கிரிராஜன், 12. கிரிசலன், 13. குக அமுதன், 14. குணாதரன், 15. குருமூர்த்தி.
16. ஜெயபாலன், 17. ஜெயகுமார், 18. கந்தசாமி, 19. கார்த்திக், 20. கார்த்திகேயன், 21. கருணாகரன், 22. கருணாலயன், 23. கிருபாகரன், 24. குலிசாயுதன், 25. குமரன், 26. குமரேசன், 27. லோகநாதன், 28. மனோதீதன், 29. மயில்பிரீதன், 30. மயில்வீரா.
31. மயூரகந்தன், 32. மயூரவாஹனன், 33. முருகவேல், 34. நாதரூபன், 35. நிமலன், 36. படையப்பன், 37. பழனிவேல், 38. பூபாலன், 39. பிரபாகரன், 40. ராஜசுப்ரமணியம், 41. ரத்னதீபன், 42. சக்திபாலன், 43. சக்திதரன், 44. சங்கர்குமார், 45. சரவணபவன்.
46. சரவணன், 47. சத்குணசீலன், 48. சேனாபதி, 49. செந்தில்குமார், 50. செந்தில்வேல், 51. சண்முகலிங்கம், 52. சண்முகம், 53. சிவகுமார், 54. சிஷிவாகனன், 55. செளந்தரீகன், 56. சுப்ரமண்யன், 57. சுதாகரன், 58. சுகதீபன், 59. சுகிர்தன், 60. சுப்பய்யா.
61. சுசிகரன், 62. சுவாமிநாதன், 63. தண்டபானி, 64. தணிகைவேலன், 65. தண்ணீர்மலயன், 66. தயாகரன், 67. உத்தமசீலன், 68. உதயகுமாரன், 69. வைரவேல், 70. வேல்முருகன், 71. விசாகனன், 72. அழகன், 73. அமுதன், 74. ஆறுமுகவேலன், 75. பவன்.
76. பவன்கந்தன், 77. ஞானவேல், 78. குகன், 79. குகானந்தன், 80. குருபரன், 81. குருநாதன், 82. குருசாமி, 83. இந்திரமருகன், 84. ஸ்கந்தகுரு, 85. கந்தவேல், 86. கதிர்காமன், 87. கதிர்வேல், 88. குமரகுரு, 89. குஞ்சரிமணாளன், 90. மாலவன்மருகன்.
91. மருதமலை, 92. முத்தப்பன், 93. முத்துக்குமரன், 94. முத்துவேல், 95. பழனிநாதன், 96. பழனிச்சாமி, 97. பரமகுரு, 98. பரமபரன், 99. பேரழகன், 100. ராஜவேல், 101. சைலொளிபவன், 102. செல்வவேல், 103. செங்கதிர்செல்வன், 104.செவ்வேல், 105. சிவகார்த்திக், 106. சித்தன், 107. சூரவேல், 108. தமிழ்செல்வன், 109. தமிழ்வேல், 110. தங்கவேல், 111. தேவசேனாபதி, 112. திருஆறுமுகம், 113. திருமுகம், 114. திரிபுரபவன், 115. திருச்செந்தில், 116. உமைபாலன், 117. வேலய்யா, 118. வெற்றிவேல்.
முருகா என்றால்!
இப்பிரபஞ்சத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டதே! ஆனால் முருகப்பெருமான் மட்டுமே பரிணாம வளர்ச்சிக்கு உட்படாதவன். பரிணாம வளர்ச்சிக்கு உட்படாத முருகப்பெருமானின் திருவடியைப் பற்றி ஆசி பெற்ற அகத்தியர் முதல் வழிவழி வந்திட்ட நவகோடி சித்தரிஷி கணங்களும் முருகன் அருளால் பரிணாம வளர்ச்சியிலிருந்து விடுபட்டு முற்றுப்பெற்ற ஞானிகளானார்கள் என்ற பேருண்மையை உணரலாம். அவர்களைப்போல நாமும் பரிணாம வளர்ச்சிக்கு ஆளாகாது அதனின்று விடுபட்டு முற்றுப்பெற்ற ஞானிகளாகிட முருகன் திருவடியை பற்றினாலன்றி முடியாது என்பதையும் உணரலாம். ஆதலின் பரிணாம வளர்ச்சியினின்று விடுபட முருகன் அருள் பெறுதல் அவசியம் என்று உணர்த்தப்படும்.
அவர்களெல்லாம் முருகன் அருள் பெற வேண்டுமெனில் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சைவஉணவை மேற்கொண்டு பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தும் காலை மாலை ஓம் முருகா என்றோ ஓம் சரவண பவ என்றோ முருகனின் திருநாமங்களை தவறாது பயபக்தியுடன் சொல்லி வருவதுமாய் இருந்திட இருந்திட நாமத்தின் பலன்கூடி உண்மை அறிவுமிகும்.
மேல்மேலும் ஜீவதயவினை தொடர்ந்து செய்து செய்து முருகனின் நாமங்களை சொல்லி சொல்லி நாத்தழும்பேறும் வரையும் மனமுருகி சொல்ல சொல்ல பரிணாம வளர்ச்சியின் பாதையினின்று விடுபடும் மார்க்கம் முருகனருளால் புலப்படும். புலப்படும் பாதையில் முருகன் திருவடித்துணையுடன் சென்றுமே ஞானிகள் சூழ பாதுகாப்பாய் சென்றுமே பரிணாம வளர்ச்சியிலிருந்து விடுபடலாம்.
முருகா ஞானபண்டிதா! ஞானத்தலைவா! செந்தில்நாதா! சிங்காரவேலா! தணிகைநாதா! தணிகாசலனே! அசுரர் கிளை முடித்த அமராபதி காவலனே! தேவசேனாபதியே! குன்றமர்ந்த வேலா! குமாரக் கடவுளே! குகனே! சுவாமிநாதா! செங்கோட்டு வேலவனே! பழனிநாதா! என்றே முருகனின் நாமங்களை விடாது செபிப்போம். அவன் புகழ் பாடுவோம் நாமம் சொல்லுவோம்.
முருகன் பெருமையை பரப்புவோம் முருகன் அருள் பெறுவோம் மீளஇயலா பரிணாமத்தினின்று மீண்டு வெற்றி பெறுவோம்.
சொல்லுங்கள் முருகனின் நாமத்தை!
செல்லுங்கள் முற்றுப்பெறும் நிலை நோக்கி!!
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989