Thursday, January 5, 2017

ஜக்கம்மா தேவி

ஜக்கம்மா தேவி என்பது ராஜகம்பளம் தொட்டிய நாயக்கர் சாதியினரால் வணங்கப்படும் குல தெய்வம். தொட்டிய நாயக்கர்களில் சிலர் குறி சொல்தல், கோடாங்கி சொல்தல், அருள் வாக்களித்தல், குடுகுடுப்பை சொல்தல், 

கைரேகை சோதிடம் பார்த்தல்,வேட்டை ஆடுதல் ,விவசாயம் செய்தல் மாந்திரீகம் செய்தல் போன்ற வேலையில் ஈடுபடுகின்றனர். இவர்கள் அனைவருக்கும் தேவி ஜக்கம்மாதான் முதல் தெய்வம். ஜக்கம்மா காளி தேவியின் அவதாரம் என்றும், இவர் போயசம்மா, எல்லம்மா, ஜக்கும்மா, போலேரம்மா, பொம்மம்மா போன்ற வேறு சில பெயர்களாலும் இந்த மக்களால் அழைக்கப்படுகிறார்.

தேவி ஜக்கம்மா வரலாறு


கம்பளத்து நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் ஆந்திராவில் இஸ்லாமியரின் படை எடுப்பால் தெற்கு நோக்கி இடம் பெயர்ந்தார்கள். இதற்கு இஸ்லாமிய மன்னன் ஒருவன் கம்பளத்து சமுதாயப் பெண் ஒருவரை விரும்பி மணமுடித்துத் தரும்படி கேட்டதாகவும், தங்கள் சமுதாயப் பெண்ணின் பாதுகாப்பிற்காக கம்பள நாட்டை ஆண்டு வந்த பாலராசு நாயக்கர் என்ற மன்னர் இஸ்லாமியர்களிடம் இருந்து தங்கள் குல பெண்களைக் காப்பாற்றிக் கொள்ள தெற்கு நோக்கி தமிழகத்திற்கு செல்ல ஆணையிட, ஜக்கம்மா என்ற பெண் தலைமையில் கம்பளத்து சமுதாய மக்கள் சிலர் அங்கிருந்து தெற்கு நோக்கி தமிழகத்துக்கு வந்தனர்.

இப்படி வரும் வழியில் பல தடைகள் ஏற்பட்டதாகவும் , அதனை வீரம், மாந்தரிகம் போன்றவற்றால் கலைத்து அவர்களை ஜக்கம்மா காத்ததால் அவரை தெய்வமாக வழிபடத் தொடங்கினர். இதனால் இவர் ராஜகம்பளம் சாதியினரால் குல தெய்வமாக வணங்கப்படுகின்றார். என்று இந்தஜாதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


மேலும் காப்பு இனத்தில் பிறந்த ஜக்கம்மாளுக்கு ஒன்பது குழந்தைகள் பிறந்ததாகவும் , இந்தப் பிள்ளைகளின் வம்சம்தான் தற்போதைய ஒன்பது கம்பளத்து மக்கள் என்றும் சொல்லப்படுகிறது.

மாந்தரிகம்

ஜக்கம்மா மிக சக்தி வாய்ந்த தெய்வம் என்ற நம்பிக்கை சோதிட நம்பிக்கையுடைய பலருக்கும் உண்டு. குடுகுடுப்பை, கைரேகை சோதிடம், மாந்தரிகம், கோடாங்கி பார்த்தல் போன்ற வேலைகள் ஜக்கம்மா பெயரைச் சொல்லித்தான் தொடங்கப்படுகிறது.
இந்த ஜாதிமக்கள் சொல்லும் வாக்கு உண்மையாக நடக்கும் என்கிற நம்பிக்கை முன்பு பலருக்கும் இருந்தது. எட்டயபுர அரசர்களுக்குக் குருவாக இருந்தவர்கள் கோடங்கி நாயக்கர்கள் எனப்படுபவர்கள். இவர்களும் கம்பளத்து நாயக்கர் இனத்தைச் சேர்ந்தவர்களே.
ஜோதிடம், மாந்திரிகம் போன்ற கலைகளில் திறமை மிக்கவர்களாக இருந்திருக்கின்றார்கள். இந்தக் கோடங்கி நாயக்கர்கள் முன்னிலையில் தான் திருமண வைபவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. திருமணம் மட்டுமல்ல, இறப்பு சடங்குகள், கிரியைகள் ஆகியற்றோடு ஒரு குருவின் அனைத்து கடமைகளையும் நிறைவேற்றுபவர்களாக இவர்கள் இருந்திருக்கின்றனர்.

கட்டபொம்மன்


இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட சில மன்னர்களுள் வீரபாண்டிய கட்டபொம்மனும் ஒருவர். இவர் ராஜகம்பளம் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் இவரின் குல தெய்வமாக ஜக்கம்மாவே இருந்துள்ளார். இவருடைய அரண்மனை அமைந்திருந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைப் பகுதியில் ஜக்கம்மாவுக்கு கோவில் ஒன்றும் அமைத்திருந்தார். இவர் தினமும் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்வதுடன் தன்னுடைய செயல்பாடுகளுக்கு இங்குதான் வேண்டிக் கொள்வார் என்பதும் ஒரு கும்மிப் பாடல் மூலம் தெரிகிறது .

கம்பளத்து மக்கள் 
பொதுவாக தொட்டிய நாயக்கர், ராஜகம்பளம் சாதியினைச் சேர்ந்தவர்கள் ஜக்கம்மாவைக் குல தெய்வமாகக் கொண்டுள்ளதால் இவர்கள் சாதி விழாக்களில் ஜக்கம்மா வழிபாடும் ஒன்றாக உள்ளது.மாசி மாத திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது
திருவிழா
ஆண்டுதோறும் சித்திரை மாதம் வரும் திங்கள் கிழமையில் ஜக்கம்மா உயிர் நீத்தார் என்ற நம்பிக்கையில் சித்திரை மாதத் திங்கள் கிழமைகளில் ஜக்கம்மாவுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. பாஞ்சாலங்குறிச்சியிலிருக்கும் ஜக்கம்மா கோவிலில் கம்பளத்து சாதியினர் சிறப்பு வழிபாடுகளுடன் தேவராட்டம், சேர்வைஆட்டம், கும்மி போன்றவைகள் மூலம் ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் விழாவைக் கொண்டாடுகின்றனர்.

ஜெக்கதேவியை எப்படி வழிபட வேண்டும்


தேவி ஜெக்கதேவிக்கு வேண்டுதல் சொல்லி இருந்தால் அந்த வேண்டுதலுக்கு “ அரக்கு மொக்கு “ என்று சொல்லி தான் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள் அந்த மக்கள் .
.அப்படி நேர்த்தி கடன் இல்லை என்றால் “ சரத்து மொக்கு “ என்று சொல்லி வட்டமாக நின்று வணங்கி செல்வார்கள் .இந்த வழிபாடு கார்த்திகை மற்றும் மாசி மாத ஜக்கதேவி கோவிகளின் வழிபாடுகளில் காணலாம் .

ஆதி ஜெக்கு பெயர்வரக்காரணம் 
உலகம் தோன்றும் போது அண்ட சராச்சரமும் இருண்ட பகுதியாக எவ்வித ஒளி ஒலியும் இல்லாமல் இருந்தது .அதனால் தான் ஆதி என்னும் பெண் தெய்வத்தை இரவுக்கு ஒப்பிடுகிறோம் .
அதன் பின் பலகோடி ஆண்டுகள் இருள் மயமாக இருந்து இருளின் மத்தியில் கண்ணுக்கு தெரியாத ஒரு மாய சக்தி அண்டத்தில் பல திசைகளிலும் பல கோணங்களில் அதன் சக்திதிக்கு ஏற்ப ஒரு மாய பொருளாக உருவாக்கி கொண்டு இருக்கும் போது அந்த அண்டங்களின் மத்தியில் ஒரு மென்மையான் ஒலி அ …அஅ…அஅஅ….. என்ற ஒலி தோன்றியவுடன் இருண்ட உருவம் இல்லாத பூமியின் ஆத்மா ஒளியின் மத்தியில் சிறிய சுடராக உருவான ஜோதியைத்தான்

ஆ + தீ =ஆதீ என்று ஆதி சக்தி
என்றும் ஆதி ஜெக்கு என்றும் நாம் அழைக்கின்றோம் .
ஆதி ஜெக்க தேவியின் அம்சத்தில் தோன்றிய துர்கைகள்

ஆதி ஜெக்க தேவியின் அம்சத்தில் தோன்றிய துர்கைகள் 9
அந்த தேவதைகளின் பெயர்கள் வருமாறு :

1. வன துர்க்கை – பிறவி பெருங்கடலை அளிப்பவள்
2.குளிகை துர்க்கை – திரிபுரம் எரிக்க சிவனுடன் சென்றவள்
3.ஜாத வேதா துர்க்கை – வாயுவுக்கு அருளியவள்
4.ஜீவளா துர்க்கை – பண்டா சுரனை வதம்புரிய அனல் பிரம்பாகி அரண் அமைத்தவள் .
5.சாந்தி துர்க்கை – தச்ச யாகத்தின் முடிவில் வெகுண்ட சிவனை சாந்தி படுத்தியவள் .
6.சபரி துர்க்கை – பார்த்தனுக்கு பாசுபதம் அளிக்க சென்ற சிவனுடன் வேட்டு வாசி வடிவில் சென்றவள் .
7.தீப துர்க்கை – குண்டலினி யோகிகளுக்கு ஒளியாய் நின்று உதவியவள் .
8.ஆசூரி துர்க்கை -அமுதம் தாங்கிய திருமாலுக்கு உதவியவள்
9.லவன துர்க்கை –லவணன் என்ற அசுரனை சத்ருக்கன் வென்று வர ராமர் வழிபட்டவர்கள்
தொம்மிதி பெத்தம்மாள்

ஆதி ஜெக்க தேவிக்கு 9 உடையப்பட்டவள் என்று தமிழிலும் ,தொம்மிதி பெத்தம்மாள் என்று தெலுங்கிலும் அழைக்கிறோம் .
 தொம்முதி என்றால் 9 என்றும் பெத்தா என்றால் பெரியவள் என்றும் பொருள் .